ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பாப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும், லுமுர் 54 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் அதிரடி காட்டியது. 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த மிச்சேல் மார்ஷ் 26 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரூசோவ் உடன் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்சர்களையும் விளாசினார். 26 பந்துகளில் சால்ட் அரைசதம் கடந்தார். அவர் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில், 16.4 ஓவரில் டெல்லி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றிபெற்றது.