பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி மவுசு உண்டு. தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். இதன் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகென் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு, கடைசியாக நடந்து முடிந்த ஆறாவது சீசனில் அசீம் ஆகியோர் டைட்டில் வின்னர்களாகினர்.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஆண்டுதோறும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தான் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து லாக்டவுன் போடப்பட்டிருந்ததன் காரணமாக அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அதிகளவில் பண்டிகைகள் வரும் அந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் கடந்த 2 சீசன்களும் அவ்வாறே அக்டோபர் மாதம் தொடங்கி நடத்தப்பட்டது. கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் ஜனவரி மாதத்தில் தான் முடிவடைந்தது. அந்நிகழ்ச்சி முடிந்து 4 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அடுத்த சீசன் குறித்த வேறலெவல் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற ஜூலை மாதமே தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு 2 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவ்வாறு களமிறங்கிய தனலட்சுமி மற்றும் ஷிவின் இருவருக்குமே நல்ல வரவேற்பு கிடைத்ததால், பிக்பாஸ் சீசன் 7-ல் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.