கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளதாக அந்நிறுனம் அறிவித்துள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு தினமும் 23 உள்ளூர் விமானங்களும், சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவிற்கு செல்லும் இரண்டு சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் 8,750 பயணிகள் பயணம் செய்த வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து கோவைக்கும் கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் கோவையிலிருந்து மும்பைக்கு விமான சேவை துவங்க உள்ளது. காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும், மீண்டும் 9.00 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி 11 மணி அளவில் மும்பை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவை மும்பை இடையே இன்டிகோ, விஸ்டாரா என மூன்று விமானங்கள் சேவை இருந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளது. கோவையிலிருந்து வியாபார ரீதியாகவும், வெளிநாடு மருத்துவத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமான சேவை துவங்கப்பட உள்ளது.