ரூ. 1000 க்கும் மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் வகையில் தமிழக மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் கட்டணங்கள், அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நடைமுறையில், மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் செலுத்த முடியாது. மாறாக ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே செலுத்த முடியும் நிலை உள்ளது. இந்த முறையை ரூ. 1000க்கும் மேல் உள்ள மின்கட்டணங்களுக்கே கொண்டுவர மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அண்மையில் முன்மொழிந்துள்ள மாற்றங்களின் படி, வீட்டு உபயோக நுகர்வோரின் மின் கட்டணம் ரூ.1000-க்கு மேல் இருந்தால், அதை ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை ஆகியவற்றில் மட்டுமே செலுத்த முடியும்.
அதன்படி, இனி இரண்டு மாத மின் பயன்பாடு 372 யூனிட்டுகளை (ரூ.1003.50 கட்டணம்) தாண்டிய வீட்டு உபயோக பயனர், மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கட்டணம் செலுத்துவது எளிமையாகும்.. அலுவலகங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி கவுண்டர்களில் தேவையற்ற பணம் கையாளுவதையும் இது தவிர்க்கவும் உதவும். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் முறைகள் மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.