பத்த கோணாசனம்

by Editor News

வடமொழியில் ‘தண்ட’ என்றால் ‘கம்பு’, ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’, ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’, ‘கோனா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால்கள் கைகளால் பிணைக்கப்பட்டு உடல் சற்று சாய்ந்து இருக்க புட்டத்தால் உடலை சமநிலையில் வைக்க வேண்டும். தண்டயமன பத்த கோணாசனத்தில் உடல் மட்டுமே சமநிலையில் வைக்கப்படுவதில்லை; மனதும் சமநிலைப்படுத்தப்படுகிறது. இந்த ஆசனத்தை பயில்வதால் சுவாதிட்டான சக்கரம் பலம் பெறுகிறது. இச்சக்கரமே உணர்வுகளோடு தொடர்புடையதாகவும் வளைந்து கொடுக்கும் பண்பையும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் குணத்தையும் வளர்ப்பதாகும். சுவாதிட்டான சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மனதும் சமநிலைத்தன்மையோடு இருக்கிறது.

பலன்கள்

ஜீரண கோளாறுகளைச் சரி செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இடுப்பை வலுப்படுத்துகிறது. தொடைகளைப் பலப்படுத்துகிறது. மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.

செய்முறை

விரிப்பில் அமர்ந்து இரண்டு கால் பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்துத் தரையில் வைக்கவும். கைவிரல்களால் கால் விரல்களை அல்லது பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உடலைச் சற்றுப் பின்னால் சாய்த்து கால்களை மார்பு உயரத்துக்கு மேலே உயர்த்தவும். இப்போது உங்கள் உடல் எடையை உங்கள் புட்டம் தாங்கியிருக்கும். நேராகப் பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்தப்பின் கால்களைத் தளர்த்தி முந்தைய நிலைக்கு வரவும். முதுகுத்தண்டு, இடுப்பு, முட்டி ஆகியவற்றில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

Related Posts

Leave a Comment