கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி …

by Editor News

வரத்து அதிகரிப்பின் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறி சப்ளை செய்யப்படுகிறது. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவது, வரத்து குறையும் போது விலை அதிகரிப்பதும் வாடிக்கையான ஒன்று. இந்நிலையில், தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தினசரி ஆயிரத்து 100 டன் தக்காளி வருவது வழக்கம். இந்நிலையில், தற்போது ஆயிரத்து 400 டன் முதல் ஆயிரத்து 500 டன்கள் வந்துள்ளன. தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் விலை குறைந்து கிலோ ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 15 கிலோ பெட்டி 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வெறும் 100 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment