சருமத்தில் தேங்கியுள்ள அழுக்கு காரணமாகவே அதிகளவில் முகப்பருக்கள் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, முகத்தை தினமும் குறைந்தது மூன்று முறையாவது தண்ணீரில் சுத்தமாக கழுவினால் பருக்கள் பிரச்சனையை குறைக்கலாம்.
குளித்தப்பின்னர் சருத்ததை கரடுமுரடான துணியால் அழுத்தி துடைப்பது சரும எரிச்சல், தோல் சிவத்தல், வீக்கத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு செய்வதால், முகத்தில் இருக்கும் பருக்கள் வெடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
முகத்தில் உள்ள பருக்களை கைகளால் கசக்கி காயப்படுத்துவதும் பருக்களின் பரவலுக்கு காரணமாகும். பருக்களை கசக்கும் போது சருமத்தின் மற்ற பகுதிக்கு பரவும் பாக்டீரியாக்கள், முகப்பரு பரவலுக்கு வழிவகுக்கிறது.
அதிகப்படியான மன அழுத்தம் முகத்தில் பருக்களின் பரவலுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்து மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
சருமத்தை பராமரிக்க நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் எண்ணெய் மூலக்கூறுகளின் கலவை அளவு அதிகமாக உள்ளதா என பார்த்து வாங்குவது அவசியம். காரணம், இந்த எண்ணெய் கலவைகள் முகப்பரு பரவலை அதிகரிக்கும்.