76 வயதாகும், பிரபல மலையாள காமெடி நடிகர் மம்மூக்கோயா, மேடை நாடக கலைஞராக இருந்து பின்னர் மலையாள திரையுலகில் நடிகராக மாறியவர். 1979 ஆம் ஆண்டு, ‘அண்ணியாருதே பூமி’ என்கிற படத்தின் மூலம், ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான மம்மூக்கோயா, பின்னர் அடுத்தடுத்து பல மலையாள படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மம்மூட்டி, மோகன்லால், போன்ற மலையாள முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்மூக்கோயா கேரள மாநிலம் களிகவு மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகாலர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படவே.. மூச்சு பேச்சின்றி கீழே சரிந்து விழுந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பதறிப்போய், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் மம்மூக்கோயாவை பரிசோதித்த பின்னர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்ததோடு, ஐ சி யூ வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மம்மூக்கோயாவின் உடல் நிலையில் முன்பை விட சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், கவலைக்கிடமாக தான் உள்ளதாகவும், எதையும் 72 மணிநேரத்திற்கு பின்பு தான் கூறமுடியும் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய பிரார்த்தனையை தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் மலையாள திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.