327
பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
சத்து மசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியில் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியி லிச்சை தருவோன்சற் சீடனே.
விளக்கம்:
நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதை தனக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து, நிலையான இறைவனை உணர்ந்து அவன் மேல் உண்மையான அன்பினால் உருகும் போது, இறைவன் தனது திருவருளால் ஒரு உண்மையான குருவினை காட்டி அருளுவான். அப்படி இறைவன் காட்டி அருளிய குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம் உண்மை ஞானத்தை பெறுவதற்கு அவரது திருவடிகளை பணிந்து, அந்த குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த சக்தியே வேண்டும் என்று தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே உண்மையான சீடன் ஆவான்.