ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாள் என்று கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி 9வது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். ரமலான் மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவம் காரணமாக மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி இஸ்லாமியர்கள் ஒன்றாகக் கூடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ரமலான் பண்டிகையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் , பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள வாரச்சந்தைகளில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியது குறிப்பிடத்தக்கது.