ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வார சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் என்றாலே நினைவுக்கு வருவது பிரியாணி தான். ஒரு மாதம் காலம் நோன்பு கடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் இந்த நாளில் விரதத்தை முடித்து அசைவ உணவு எடுத்துக்கொள்வர். இதனையொட்டி இறைச்சிக்காக தமிகம் முழுவதும் உள்ள வார சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அந்தவகையில், புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தையில் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, விருதாச்சலம் அருகே உள்ள வேப்பூர் வாரச் சந்தையில் விற்பனை களைகட்டியது. இங்கு வேப்பூர், சேப்பாக்கம், நல்லூர், கண்டப்பங்குறிச்சி, அரியநாச்சி, பெரிய நெசலூர், சிறுபாக்கம், மங்களூர், ஆவட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஆடுகள் எடைக்கு ஏற்ப ரூ. 3000 முதல் ரூ. 25,000 வரை விற்பனையாகின. ஒரே நாளில் ₹5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளதால் செஞ்சி சந்தை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இன்று ஒரே நாளில் விற்பனை ரூ. 5 கோடியை எட்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.