ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை மஸ்க் விதித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் பெற கட்டணம், ப்ளூ டிக் சேவையை தொடர்ந்து பெற மாதாந்திர கட்டணம், விளம்பரமின்றி பார்க்க கட்டணம் என எட்டுத்ததற்கெல்லாம் கட்டணம் என்கிற நிர்பந்தத்தை கொண்டு வந்திருக்கிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் ‘ப்ளூ டிக்குக்கு மாதம் தோறும் கட்டண சந்தா செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இனி ட்விட்டர் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ( Verified Users)மட்டுமே ட்விட்டர் வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியும் என்று தடலாடியாக அறிவித்துள்ளார். திடீரென ட்விட்டர் லோகோவையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு பணிந்து மீண்டும் நீல நிறக் குருவியையே லோகோவாக மாற்றியமைத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ( Verified Users) புளூ டிக்கை தொடர்ந்து வைத்திருக்க, சந்தாதாரராக மாற பயனாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.