இந்த புனித வெள்ளி நாளில் உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கிறிஸ்தவர்களும் மதியம் தேவாலயங்களுக்குச் சென்று சுமார் மூன்று மணி நேரம் ஆலயத்திலே அமர்ந்திருந்து வழிபாட்டிலே கலந்து கொண்டு உலக ரட்சகராம் இயேசு கிறிஸ்து தாம் மரிப்பதற்கு முன்பதாக சொன்ன இன்றியமையாத ஏழு வார்த்தைகளை குறித்து தியானத்தை மேற்கொள்வது, ஜெபத்திலே, உபவாசத்திலே தரித்திருப்பது பழக்கமாக இருக்கிறது .
நாம் செய்த பாவங்களை தன் பாவமாக ஏற்றுக் கொண்டு, அந்தப் பாவங்களில் இருந்து நமக்கு விடுதலையை கொடுப்பதனுடைய அடையாளம் தான் புனித வெள்ளி. அப்படி பாடுகளை ஏற்றுக் கொண்டதன் நிமித்தமாக இயேசு கிறிஸ்து அனுபவிக்கின்ற பாடுகள், துன்பங்களை ஆழமாக சிந்திப்பது தான் புனித வெள்ளி.
நம்முடைய வாழ்க்கையிலே தியாகம் செய்வதை மையமாக வைக்க வேண்டும். நம் குடும்பத்தையும், நம் நாட்டையும் முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல தியாகம் அவசியம். இத்தகைய ஆன்மீகத்தை நாம் கற்றுக்கொள்ள இந்த புனித வெள்ளி நமக்கு உதவுகிறது. தியாகத்தின் மூலமாக, இயேசு காட்டிய அன்பின் மூலமாக நாம் செயல்படும் பொழுது இந்த புனித வெள்ளியின் பொருள் நிறைவு பெறுகிறது. இயேசு எந்த அளவுக்கு உலக மக்களை நேசிக்கிறார் என்பதை இந்த புனித வெள்ளியுடைய சிலுவையின் அனுபவத்தின் மூலமாக நாம் கற்றுக் கொள்கின்றோம்.
கடினமாக உழைப்பதும், துன்பம், துக்கம், பாடுகளை மற்றவர்களுக்காகவும், மற்றவருடைய நன்மைக்காக செய்கிறோம் என்பதை அறியும் பொழுது அது ஒரு பெரிய ஆசீர்வாதமாக வெளிப்படும்.