இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பை ஒப்பிடும் போது இது 47 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் இது கடந்த 6 மாதங்களில் பதிவாகிய புதிய உச்சம் ஆகும். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக வழக்குகளில் ஆஜராகலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் ஆன்லைன் வழியே ஆஜராகி வாதிட்டாலும், நாங்கள் வழக்கு விசாரணையை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.