தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது. ஆனால் தற்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி ஆகிய இடங்கள் இந்த திட்டத்திற்கு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. பரவத்தூர், கொடியாளம், அண்டமி, நெம்மேரி உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடசேரி, மன்னார்குடி பகுதிகளில் விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.