தினசரி சூடாக ஒரு கப் கிரீன் டீ குடித்தால் அது நமது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாகவும், உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று பலரும் நம்புகின்றனர். அவ்வாறு கிரீன் டீயுடன் இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு, மூலிகைகள், பழங்கள் போன்ற பல விதமான உப பொருட்களை சேர்த்தும் கிரீன் டீயை குடிக்கலாம்.
ஆனால் உண்மையிலேயே கிரீன் டீ குடிப்பதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகுமா என்று கேட்டால் அது உண்மைதான். ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் தினமும் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று கூறுவது ஒரு கட்டுக்கதை ஆகும். வெறும் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக பரப்பப்பட்ட ஒரு பொய் என்று கூட இதனை கூறலாம். இதன் மூலம் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று நம்பி நீங்கள் தினமும் கிரீன் டீ குடித்துக் கொண்டிருப்பீர்கள்.
சில உணவு வகைகளை நாம் உட்கொள்ளும்போது அவை கொண்டிருக்கும் கலோரிகளை விட அவற்றை செரிமானம் செய்வதற்கு அதிக கலோரிகளை செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதன் காரணமாக நமது உடல் எடை சிறிதளவு குறைய வாய்ப்புகள் உண்டு ஆனால் இதுவும் ஒரு எல்லை வரை தான் வேலை செய்யும். கிரீன் டீயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் பெனோல் ஆகியவை இந்த விளைவை உண்டாக்குகின்றன. ஆனால் தினமும் இரண்டு கப் அளவிற்கு கிரீன் டீ மட்டுமே குடிப்பது உடல் எடையை குறைக்க உதவாது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கிரீன் டீ குடிப்பதால் கண்டிப்பாக உங்கள் உடல் எடை குறையாது. அதற்கு பதிலாக உங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வது, சரியான உணவு பழக்க வழக்கம் ஆகியவற்றின் மூலமே உங்களால் உடல் எடையை குறைக்க முடியும்.