ஹர்த்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைடன்ஸ், தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோஹித் தலைமையில் மும்பை இண்டியன்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஷிகர் தவன் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ், நிதிஷ் ரானா தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டு பிளஸி தலைமையில் ராயல் சேலர்ஞ்சர்ஸ் பெங்களூரு, மார்க்ரம் தலைமையில் சன் ரைசஸ் ஹைதராபாத், ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட், வார்னர் தலைமையில் டெல்லி கேப்பிடஸ் என 10 கேப்டன்கள் கோப்பைக்காக மல்லுகட்டவுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னர், டு பிளசி, மார்கரம் என மூன்று வெளிநாட்டு வீரர்கள் கேப்டனாக செயல்படவுள்ளனர். ஏழு அணிகளுக்கு இந்திய வீரர்களே கேப்டனாக செயல்படுகின்றனர். விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாஸ் போட்டதற்கு பிறகு ஆடும் லெவனில் மாற்றம் செய்துகொள்வது, தாமதமாக பந்துவீசினால் பவுண்டரி லைனில் நான்கு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி, இம்பேக்ட் பிளேயர் (Impact Player)என புதிய விதிகள் நடப்பு தொடரிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தொடக்க விழா நிகழ்ச்சியில் நடிகை தமனாவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாலிவுட் ஸ்டார்களான Katrina Kaif,Rashmika Mandanna,Tiger Shroff ஆகியோரின் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் Arijit Singh குரலில் அரங்கமே மயங்க காத்திருக்கிறது. அத்துடன் வண்ணமயமான வாணவேடிக்கைகளும் அரங்கேற உள்ளன.
கடந்த சீசனில் தொடர் தோல்வியை சந்தித்து ஒன்பதாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை முழுபலத்தோடு களமிறங்குகிறது. கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக அமைய வாய்ப்புள்ளதால் சக வீரர்கள் கோப்பையோடு விடைகொடுக்க காத்திருக்கின்றனர். பென் ஸ்டோக்ஸ் வருகை, ஜடேஜா தக்கவைப்பு என்ற பல மாற்றங்கள் அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களும் அதிரடி நாயகன்களுமான பிராவோ, பொல்லார்ட், கெய்ல் ஆகியோர் இல்லாத ஐபிஎல் தொடராக இந்த தொடர் அமையவுள்ளது.
சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மற்ற இரண்டு அணிகளுக்கு தலா ஏழு கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் சாம்பியன் அணிக்கு 4.8 கோடி ரூபாய் வழங்கப்பட்டதில் தற்போது 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐபிஎல் தொடர் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.