இந்த வருடம் ராம நவமி வியாழன் அன்று வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஸ்ரீராமர் விஷ்ணுவின் 7வது அவதாரம். விஷ்ணுவுக்கு வியாழன் மிகவும் பிரியமான வாரம்.. வியாழன் அன்று ராம்ஜன்மோத்ஸவா நடைபெறுவதால் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.ராம நவமி நாளில், ஒரு கிண்ணத்தில் கங்கை நீரை எடுத்து’ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ராம்சந்த்ராய ஸ்ரீ நம’ என்று 108 முறை உச்சரிக்கவும். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்கவும். இதனால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ ராமநவமி விழா 2023 ம் ஆண்டில் மார்ச் 30 ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது. அதற்கு பிறகே தசமி திதி வருகிறது. அதனால் மார்ச் 30 ம் தேதி நாள் முழுவதும் நவமி திதி காணப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராமநவமியின் போது சிறப்பு யோகங்கள் உருவாகும் என்பது நம்பிக்கை. ஸ்ரீராம நவமி அன்று அமிர்த சித்தி யோகம், குரு புஷ்ய யோகம், சுப யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் உருவாகிறது.
மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரம் ராம அவதாரம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் ராமராக அவதாரம் எடுக்க வேண்டும் என முடிவு செய்த போது, அவர் இல்லாமல் எப்படி வைகுண்டத்தில் இருப்பது என மகாலட்சுமி, ஆதிசேஷன் உள்ளிட்ட அனைவரும் வருந்தினர்.
அவர்களின் துயரத்தை போக்குவதற்காக மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், பெருமாளின் கையில் இருக்கும் சங்கும் சக்கரமும், பரதன் மற்றும் சத்ருகனனாக அவதாரம் எடுத்து, பெருமாளுடனேயே இருக்கும் பாக்கியத்தை பெற்றனர். ராமர் அவதரித்த தினத்தை நாள் ராமநவமியாக கொண்டாடுகிறோம்.
வழிபடும் முறை :
ஸ்ரீராமநவமி இந்நாளில், ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் வைத்து படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அன்று முழுவதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிப்பது நல்லது.
பலன் :
ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.