பொன்னியின் செல்வன் 2 படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு… ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ஒட்டுமொத்தமாக இப்படத்தின் இரண்டு பாகத்தையும் இயக்க இயக்குனர் மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட் செலவு செய்த நிலையில், முதல் பாகமே இந்த 500 கோடியை பெற்று தந்தது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாகத்தில் அப்படி இப்படி என்று சில குறைகள் இருந்தாலும், இப்படத்தை நேர்த்தியாக இயக்கி இருந்தார் மணிரத்னம். மேலும் இரண்டாவது பாகத்தை அவர் எப்படி இயக்கி இருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற அக நக என்கிற மெலடி பாடல்.. வெளியாகி, வந்திய தேவன் மற்றும் குந்தவையின் காதலை எடுத்துரைத்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை நடிகரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் 29 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.