அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனைகளில் 2 நாள் ஒத்திகை..

by Editor News

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2 நாள் ஒத்திகை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் கடந்த ஓராண்டாகவே கொரோனா தினசரி பாதிப்பு 100-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்து வந்தது. ஆனால் தற்போது தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக, சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்துடன் மற்றொரு வைரஸ் காய்ச்சலான இன்புளூவன்சா பரவலும் பெருகி வருகிறது.

இதனையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் விதமாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி படுத்த வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக வெளியிட்டுள்ளன. இந்த ஒத்திகையின்போது, அரசு மற்றும் தனியார் துறையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள், படுக்கைகள், மருத்துவ தளவாடங்கள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்புகள் உறுதிபடுத்தப்படும்.

இந்த ஒத்திகை தொடர்பான விரிவான தகவல்கள், நாளை (27-ந்தேதி) காணொலிக்காட்சி வழியாக நடத்தப்படுகிற ஆலோசனை கூட்டத்தின்போது மாநிலங்களிடம் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டலின் படி சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை என்றும், 10 லட்சம் பேருக்கு 140 என்ற அளவை விட குறைவாகவே சோதனைகள் நடத்தப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆகையால் கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment