அம்ரித் பால் சிங் பிரச்னையில் டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் லண்டனில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப்பை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.அம்ரித் பால் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது ரூப்கர் மாவட்ட போலீசார் கடத்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய லவ் ப்ரீத் சிங்க் என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது அவரை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்
இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், அம்ரித் பால் சிங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்ரித் பால் சிங் மீதான போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய கொடி இறக்கப்பட்டு, காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடியாக டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது.அதேநேரத்தில் லண்டனில் இந்திய தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை லண்டன் காவல்துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர். தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் கூடிய நிலையில், அவர்களை குறிப்பிட்ட தூரத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையினர் மீது மையை வீசியதோடு, தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி வீசினர். இச்சூழ்நிலையில் லண்டன் தூதரகத்தில் மிக நீளமான இந்திய தேசியக் கொடியை ஊழியர்கள் பறக்கவிட்டனர்.