விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையாக இருந்த கோதை குடும்பத்தை பிரிக்க வேண்டும் என ஒருபக்கம் சந்திரகலாவும், மறுபுறம் அர்ஜுன் குடும்பமும் ராத்திரி பகலாக வேலை செய்தனர். சேர்மனாக வேண்டும் என்ற வெறியில் தமிழை வீழ்த்த, தானே ஆள் வைத்து தன்னை கத்தியில் குத்த வைத்த அர்ஜுன், அந்த பழியை தூக்கி தமிழ் மேல் போட்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆனான்.
தன் கணவன் அர்ஜுனை அண்ணன் தமிழ் தான் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் என ராகினியும் நம்பிவிட்டாள். தமிழ் என்ன சொல்ல வருகிறான் என்பதை காது கொடுத்து கேட்காமலேயே இதை கோதையும் நம்பி, அவனை கொலைக்காரன் எனக் கூப்பிட்டதைக் கேட்டு உடைந்து போனான் தமிழ். உடனே தனது மனைவி சரஸ்வதியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
தனக்கு இருந்த மிகப்பெரிய தலைவலி தீர்ந்துவிட்டதால், இனி நான் தான் சேர்மன் என்ற கர்வத்தில் இருந்தான் அர்ஜுன். அவனது குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். எங்கு அர்ஜுன் சேர்மனாகிவிடுவானோ என்றிருக்கையில், எதிர்பாரா திருப்பமாக கோதையின் இளையமகள் கார்த்திகேயன், கோதை இண்டஸ்ட்ரீஸின் சேர்மனாகி விட்டான். தொழிலாளர்கள் மத்தியில் யாருக்கு அதிக மதிப்பிருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள, அர்ஜுனையும், கார்த்தியையும் ஊழியர்களிடத்தில் பேசும்படி கூறினாள் கோதை. தான் பேசும்போது, கைதட்டல்களும், விசில் சத்தமும் இருக்க வேண்டும் என்பதற்காக முன்பே பணம் கொடுத்து தொழிலாளர்களை விலைக்கு வாங்கினான் அர்ஜுன். ஆனால் அதையும் மீறி கார்த்தியின் இயல்பான பேச்சும், அவன் கொடுத்த நம்பிக்கையும் ஊழியர்களை கவர்ந்தது.
இதன் விளைவாக கோதை நிறுவனத்தின் சேர்மனாக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டான். இதற்கு முக்கியக் காரணமே சரஸ்வதி, வசுவுக்கு கொடுத்த ஐடியா தான். ஒருவேளை அர்ஜுன் சேர்மனாகிவிட்டால், அவன் தங்கள் குடும்பத்தை பதம் பார்த்துவிடுவான் என்பதால் சரஸ்வதி சொன்ன திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்தி வெற்றி பெற்றுவிட்டாள் வசு.