தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பள்ளி கல்வித் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது, 500 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், சீர்மரபினர், அறநிலையத் துறை உள்பட அனைத்து துறைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படும். நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பள்ளி கல்வி துறைக்கு 40,290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.