தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்குத்திசையில் காற்றும் சந்திப்பதால் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவருகிறது. இதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதலே ஆங்காங்கே மழை பெய்தது.