பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம் ..

by Editor News

புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார்.

பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டு அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து, வெற்றியடைந்தால் அங்கேயே தீர்வு காணும் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியா ஒப்புக்கொண்டு 11 மாதங்கள் ஆகின்றது.

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விமானம் நிறுத்தப்பட்ட பின்னர், இதுவரை யாரும் அங்கு பயணத்தை மேற்கொள்ளவில்லை.

நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில், சுயெல்லா பிரேவர்மேன், ‘பிரித்தானியா-ருவாண்டா இடம்பெயர்வு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கூட்டு என்பது, சிறிய படகுக் கடத்தல் போன்ற ஆபத்தான மற்றும் சட்டவிரோத பயணங்களுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தடுப்பாக செயல்படும் ஒரு சிறந்த அணுகுமுறையாகும்’ என கூறினார்.

மேலும், ‘படகுகளை தடுத்து நிறுத்துவதற்கான எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டாண்மைக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், எங்கள் ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்துவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்கவும் ருவாண்டாவுக்குச் செல்வதாக’ கூறினார்.

இந்த திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. 2022 முழுவதும், சுமார் 45,728 பேர் ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 60 சதவீதம் அதிகம்.

Related Posts

Leave a Comment