தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது..
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 6 மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதி இருக்கும் கடிதத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கோரொனா பரவல் அதிகரித்து வருவதாகவும், ஆகையால் பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 8ம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 லிருந்து 258 ஆக உயர்ந்திருப்பதாக சுட்டி காட்டியுள்ளது.
குறிப்பாக சேலம், நீலகிரி, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏறக்குறைய இரு மடங்கு ஆகியுள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 16லிருந்து 30 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி வரையிலான ஒரு வார காலகட்டத்தில் இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0.61 விழுகாடாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதன் அளவு 2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், இன்ஃப்ளுயன்சா உள்ளிட்ட நோய்கள் கண்காணிப்பு, உரிய சிகிச்சை, தகுதியானவர்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.