லிபிய கிடங்கிலிருந்து டன் கணக்கில் மாயமான யுரேனியம்.. ஐநா தகவல் ..

by Editor News

லிபியாவில் நீண்டகால ஆட்சியில் இருந்த முன்னாள் சர்வாதிகாரி மோமர் கடாபியின் கீழ் 2003ல் அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டது.

மூன்றாம் உலக போர் வருவதற்கு அணு ஆயுதம் ஒரு காரணமாக இருந்து விடும் என்ற அச்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை அணு ஆயுதங்கள் மற்றும் ஆணு ஆயுத மூலங்களை கண்காணித்து வரும் நிலையில், லிபியாவில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கு தளத்தில் இருந்து இரண்டரை டன் யுரேனியம் காணாமல் போனதாக ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்படாத ஒரு யுரேனியம் எடுக்கும் தலத்திற்கு அதன் ஆய்வாளர்கள் அனுப்பி பார்வையிட்டனர். அப்போது அந்த சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த யுரேனியம் தாதுவைக் கொண்ட 10 டிரம்கள் காணாமல் போனதை அவர்கள் கண்டறிந்தனர்.

கணக்கில் குறிப்பிட்டுள்ள இந்த யுரேனியம் காணாமல் போன தகவலின் அடிப்படையில் உலகத்தின் முன் சர்வதேச அணுசக்தி முகமை ஒரு எச்சரிக்கை மணியை விடுத்துள்ளது. மேலும் அணுசக்தி முகமை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அணு பொருள் அகற்றியதற்கான சூழ்நிலைகள் மற்றும் அதன் தற்போதைய இருப்பிடத்தை விரைவில் தெளிவுபடுத்தும் என்று அறிவித்துள்ளது.

லிபியாவில் நீண்டகால ஆட்சியில் இருந்த முன்னாள் சர்வாதிகாரி மோமர் கடாபியின்(Muammar Gaddafi) கீழ் 2003ல் அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டது. எண்ணற்ற போராளிகள் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் எதிரெதிர் கூட்டணி அமைத்ததால் மோமர் கடாபி 2011 இல் வீழ்ந்தார். அதன் பின்னர் லிபியா ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்றே சொல்லலாம்.

நாடு அரசியல் போக்கில் இரண்டாக பிரிந்து லிபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தலைநகர் திரிபோலியில் பெயரளவிலான இடைக்கால அரசாங்கமும் கிழக்கில் இராணுவ பலமான கலீஃபா ஹப்தாரின் ஆதரவுடன் மற்றொரு இடைக்கால அரசாங்கத்திற்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கதிரியக்க அபாயம் கொண்ட அணுசக்தி மூலப்பொருளான யுரேனியம் காணாமல் போனது பதற்ற நிலையை உருவாக்க கூடும். யுரேனியம் எப்போது காணாமல் போனது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு ஆய்வாளர்கள் அந்த இடத்தைப் பார்வையிட விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் வெவ்வேறு லிபிய போராளிகளுக்கு இடையே சண்டையின் காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

அது மட்டும் இல்லாமல், யுரேனியம் சேமித்து வைக்கப்பட்ட இடம் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இல்லை என்று IAEA தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment