பார்சுவ பகாசனம்

by Editor News

வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள். காகாசனத்தில் கைகள் மடிக்கப்பட்டிருக்கும்; பகாசனத்தில் கைகள் நீட்டியபடி இருக்கும்.

இப்போது நாம் பார்க்க இருப்பது பார்சுவ பகாசனம். ‘பார்சுவ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘பக்கவாட்டு’. இதில் கைகள் மடித்து இருப்பதால் இந்த ஆசனத்தை பக்கவாட்டு காகாசனம், அதாவது Side Crow Pose என்று அழைப்பதே சரி. பார்சுவ பகாசனம் செய்வதாலும் கைகள் நல்ல பலம் பெறுகின்றன. இந்த ஆசனம் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டுகிறது.

பலன்கள்

தோள், கைகள் மற்றும் மணிக்கட்டை பலப்படுத்துகிறது. முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.சீரணத்தை மேம்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை பலப்படுத்துகிறது. உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவுகிறது. கவனத்தைக் கூர்மையாக்குகிறது. வாழ்க்கையின் சவால்களை சந்திக்கும் உறுதியை அளிக்கிறது.

செய்முறை

விரிப்பில் நேராக நிற்கவும். இடுப்பை தரையை நோக்கி இறக்கவும். மேல் உடலை வலது புறம் திருப்பி இரண்டு கைகளையும் வலது காலுக்கு வெளிப்புறம் சற்று பக்கவாட்டில் வைக்கவும். கைவிரல்களைப் பிரித்து வைக்கவும். இரண்டு கால் முட்டிகளும் அருகருகே இருக்க வேண்டும்.

கை முட்டியை சற்று மடக்கி, வலது கால் தொடையின் வெளிப்புறத்தை (கால் முட்டிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி) இடது கை முட்டிக்கு மேல் வைக்கவும். மெதுவாக கால்களை உயர்த்தி கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்குமாறு வைக்கவும். உங்கள் உடலைச் சற்று முன்னோக்கி சாய்க்கவும். கைகளை நன்றாகத் தரையில் ஊன்றி இரண்டு கால்களையும் தரையிலிருந்து உயர்த்தவும். இப்பொழுது உங்கள் இடது கை உங்களின் உடல் எடையைத் தாங்கியபடி இருக்கும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின் கால்களைக் கீழே வைத்து எழுந்து நிற்கவும். பின் இடது புறம் திரும்பி இவ்வாசனத்தைச் செய்யவும்.

குறிப்பு

தோள், முட்டி, மணிக்கட்டு, இடுப்புப் பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

Related Posts

Leave a Comment