‘வக்ரா’ என்றால் முறுக்குதல். ஆசனத்தின் உச்சநிலையில் உடலை முறுக்கிய நிலைக்குக் கொண்டுவருவது.
செய்முறை :
விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும். நேராக நிமிர்ந்து வலது காலை மடக்கி பாதத்தை இடது மூட்டுக்கு அருகில் வைக்கவும். வலது கையை முதுகுக்குப் பின்னால் தரையில் ஊன்றியபடி வைத்துக் கொள்ளவும். வலது கையை இடப் பக்கம் தள்ளி ஊன்றி, பின் இடது கையை உயர்த்தி வலது கால் கட்டை விரலை அல்லது கணுக்காலையோ பிடித்துக்கொள்ளவும். இடுப்பை வலது பக்கம் திருப்பி தோளையும், தலையையும் திருப்பிக் கொள்ளவும். சீரான மூச்சுடன் அதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.
மெதுவாக நேராகத் திரும்பி இடது கையைக் காலில் இருந்து விடுவித்து மேலே உயர்த்திய பின் கீழே இறக்கவும். வலது கையை பின்னாலிருந்து நேராகக் கொண்டுவரவும். காலை நீட்டிக் கொள்ளவும். இதேபோல், இடது புறம் செய்யவும். இரு பக்கமும் 3 முறை செய்தல் நலம்.
பலன்கள்:
தொப்பை குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். குண்டாக இருப்பவர்கள் மெலிய உதவும். முதுகு, இடுப்பு, கழுத்து பிரச்சனைகள் எதுவும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். கண் பார்வை அதிகரிக்கிறது.
எச்சரிக்கை:
முதுகு நேராக இருக்க வேண்டும். முன்னால் குனியவோ பின்னால் வளையவோ கூடாது. ஹெர்னியா பாதிப்பு உள்ளவர்கள் செய்யக் கூடாது. முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்களும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.