ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.
ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.
1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவு முறை.
3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.
4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.
13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.