ஆப்கானிஸ்தான், பப்புவாவில் நிலநடுக்கம்.. தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி ..

by Editor News

பப்புவா நியூ கினியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் அமைந்துள்ளது. இந்த நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அதிகாலை நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேபோல், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில், 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்மையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்பிறகு தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது உலக நாடுகளை கலக்கமடையச் செய்துள்ளது.

Related Posts

Leave a Comment