வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பத்த கோனாசனம்’ என்றால் ‘கட்டப்பட்ட ஆசன நிலை’ என்று பொருள். எனவே தான் இந்த ஆசனத்தை ‘சுப்த பத்தகோனாசனம்’ என அழைக்கிறார்கள்.
செய்முறை:
தரையில் விரிப்பை விரித்து, அதில் நேராக மல்லாந்து படுக்கவும். பின்பு முழங்கால்களை மடக்கி, கால்களை பிட்டப் பகுதி வரை மெதுவாக கொண்டு வரவும். பின்னர் மூச்சை மெதுவாக உள்ளிழுத்தபடி, முழங்கால்களை தளரச் செய்யவும். இந்த நிலையில் கைகளை மெதுவாக தலைக்கு மேலே கொண்டு செல்லவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது பக்கமாகத் திரும்பி எழுந்திருக்கவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பயிற்சி செய்வது நன்மை அளிக்கும்.
பயன்கள்:
மலட்டுத்தன்மையை நீக்கும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சினைப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகள் சீராக செயல்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி மற்றும் அதிகமான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால் அடிக்கடி ஏற்படக்கூடிய தலைவலியை நீக்குவதோடு, நரம்புத் தளர்ச்சியை போக்கக் கூடிய ஆற்றல் இந்த ஆசனத்திற்கு உள்ளது. சுப்த பத்தகோனாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பு தசைகள் விரிவடைந்து பெண்களுக்கு பிரசவம் எளிதாக நடைபெறுவதற்கு உதவும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்; மனஅழுத்தம் குறையும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். செரிமானத்தை சீராக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.