பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..

by Editor News

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அதிகாலை 3 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி, 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிறந்தவர்.

1984ஆம் ஆண்டு ‘தாவணி கனவுகள்’என்கிற படத்தின் மூலம் அறிமுகமான மயில்சாமி, நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர், மிமிக்ரி கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். தொடர்ந்து கன்னிராசி, தங்கச்சி படிச்சவ, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா பணக்காரன், உழைப்பாளி வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், சின்னகவுண்டர், வால்டர் வெற்றிவேல், கில்லி, ஆசை, வேதாளம், வீரம், தூள் என 200-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷங்க, லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மேலும், லொள்ளுசபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அத்துடன் அசத்த போவது யாரு, சிரிப்போ சிரிப்பு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் , விஜயகாந்த், சத்யராத் தொடங்கி விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் அவரை அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். சமூக உணர்வு, சமூக அக்கறை அதிகம் கொண்ட மயில்சாமி கொரோனா காலகட்டத்தில் தனது விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment