சிவபெருமான் வழிபாட்டிற்குரிய பொருட்களில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை, திரிசூலத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாகவும், வில்வத்தைப் போற்றுகிறார்கள். மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியபோது, அவளது கைகளில் இருந்து வில்வம் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக வில்வமரம் உள்ளது.
வில்வ மரத்தின் கிளைகள் வேதங்களாகவும், இலைகள் சிவசொரூபமாகவும், வேர்கள் கோடான கோடி ருத்திரர்களாகவும் பாவிக்கப்படுகின்றன. சிவனுக்கு பிரியமான வில்வத்தை கொண்டு, அவரை அர்ச்சிப்பதன் மூலம் ஈசனின் திருவருளை எளிதாகப் பெறலாம். முறைப்படி விரதம் இருந்து வில்வ மரத்தை பூஜிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது, லட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பதற்கு சமம் ஆகும்.
துளசி மாடம் போல், வீட்டில் வில்வ மரம் வளர்ப்பவர்களுக்கு ஒரு போதும் நரகம் கிடையாது. வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதன்படி ஒருவர் தன்னுடைய வீட்டில் வில்வ மரத்தை வளர்ப்பது என்பது, அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலனைக் கொடுக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பெரும் பாக்கியம் ஏற்படும். திருவையாறு, திருவெறும்பூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோவில்களில், வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம், ஒரு கற்பக மூலிகையாகும். இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டது. வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவையாகத் திகழ்கின்றன. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம், எட்டு கூட்டிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
இவ்வாறு அமைந்தவை ‘மகாவில்வம்’ என்றும் ‘பிரம்ம வில்வம்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டில் உள்ள வில்வம் போல், முள் இல்லாத மரங்களும் அரிதாகக் காணப்படுகின்றன. வில்வத்தால் அர்ச்சனை செய்யும் போது, சிவபெருமானை நாம் இன்னும் நெருங்க முடியும், ஈசனின் அருளைப் பெற முடியும். ஏழரைச் சனியின் பிடியில் இருப்பவர்கள், வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து வழிபடுவது சிறந்தது. இத்தகைய சிறப்புமிக்க வில்வ மரத்தின் இலைகளை, சோமவாரம் (திங்கட்கிழமை), சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மரத்தில் இருந்து பறிக்கக்கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக்கூடாது என்பதும் ஐதீகம்.