அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது இறையாண்மையை மீறும் செயல் என ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக இவ்வாறு நடந்துக்கொள்வது இன்னமும் பொறுப்பற்றது என அவர் விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனாவுக்கான பயணத்தை உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி திடீரென ரத்து செய்துள்ளார். இது பல ஆண்டுகளாக அங்கு நடைபெறும் முதல் உயர்மட்ட அமெரிக்க-சீனா சந்திப்பாக இருந்திருக்கும்.
ஆனால், இது அமெரிக்க வான்வெளியில் தவறாக வீசப்பட்ட வானிலை விமானம் என்று சீனா முன்னதாக வருத்தம் தெரிவித்தது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே, நேற்று (வெள்ளிக்கிழமை) பென்டகன் இரண்டாவது சீன உளவு பலூன் தென்பட்டதனை உறுதிசெய்தது. இந்த முறை இது லத்தீன் அமெரிக்கா வானில் பறந்ததாக அது கூறியது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பேட்ரிக் ரைடர் இதுகுறித்து கூறுகையில், ‘லத்தீன் அமெரிக்காவைக் கடக்கும் பலூன் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். இது மற்றொரு சீன கண்காணிப்பு பலூன் என்று நாங்கள் இப்போது மதிப்பிடுகிறோம்’ என கூறினார். பலூன் இருக்கும் இடம் பற்றிய கூடுதல் விபரங்களை அவர் வழங்கவில்லை.
வர்த்தக போர், பாதுகாப்பு, தாய்வான் மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் பெப்ரவரி 5 முதல் 6 வரை பெய்ஜிங்கிற்குச் செல்லவிருந்தார்.
ஆனால், அமெரிக்க வான்பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூனை அவதானித்த பிறகு இந்த பயணம் இரத்துசெய்யப்பட்டது.