புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதனை தொடர்ந்து, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. களத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து தீரமுடன் அடக்கினர். சில காளைகள் யாரிடமும் பிடிபடமால் களத்தில் நின்று விளையாடின. இந்த போட்டியில் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பிரிட்ஜ், பேன், மிக்சி, தங்க நாணயம், சைக்கிள் உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.