ஒருநாள் போட்டியில் அதிகேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்தியர் – சுப்மன் கில் சாதனை !

by Editor News

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கேப்டன் ரோகித் சிறப்பான தொடக்கம் தந்தாலும் 34 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 8 ரன்னில் ஆட்டமிழக்க இஷான் கிசன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழ, மறுபுறம் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அற்புதமாக ஆடிய அவர், ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 200 ரன்களை கடந்தார். தனிப்பட்ட முறையில் 200 அடிக்கும் ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார். மேலும் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அற்புதமாக ஆடிய அவர் 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது.

349 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து பேட்ஸ்மனான பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் 10 ஓவர்களில் 46 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் இந்திய இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 109 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் தனது 19-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் ஆயிரம் ரன்களை அதிவேகமாக தொட்ட இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ஒட்டுமொத்தத்தில் பாகிஸ்தானின் பஹர் ஜமான் தனது 18-வது இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை வரிசையில் 2-வது இடத்தை பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக்குடன் சுப்மான் கில் பகிர்ந்துள்ளார். இந்திய அளவில் ஷிகர் தவான், விராட் கோலி தங்களது 24-வது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

Related Posts

Leave a Comment