ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இன்று வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவ்வளவு எளிதில் எந்த சர்வதே அணியும் தகர்த்து விட முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் அடித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட்கோலி 166 ரன்களும், சுப்மன் கில் 116 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் பவுலர்கள் முகம்மது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. முதன்முறையாக இந்தியா இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2008-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது அந்த அணியை நியூசிலாந்து 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 402 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து பேட் செய்த அயர்லாந்து 112 ரன்களில் சுருண்டது. இந்த 290 ரன்கள்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச வெற்றி வித்தியாசமாக இருந்து வந்தது. இந்நிலையில், இதனை இந்திய அணி இன்று முறியடித்துள்ளது. இன்று இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகச்சிறப்பாக அமைந்ததால் இந்த வரலாற்று சாதனை யாரும் எதிர்பாராத விதமாக நடந்திருக்கிறது. இந்த சாதனையை எந்தவொரு சர்வதேச அணியும் அவ்வளவு எளிதில் முறிடித்து விட முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இலங்கை அணிக்கு எதிராக இன்று நடந்த ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் சில சாதனைகளையும் விராட் கோலி முறியடித்துள்ளார்.