நீதிபதிகளை தேர்வு செய்யும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட்டிற்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜூ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அரசு பிரதிநிதிகள் இடம்பெறுவது அவசியம் என்ற குறிப்பிட்டுள்ளது உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் ஒன்றிய அரசு பிரதிநிதிகளும், உயர்நீதிமன்ற கொலிஜியத்தில் மாநில அரசு பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின் படியே இதுவரை நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும். இந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அதற்கான ஆணையினை வெளியிடும். சுயேட்சையாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. இந்நிலையில் கொலிஜியம் அமைப்பில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.