டிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று செஷயரில் உள்ள ஒரு முகவரியை பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கதிரியக்க சாதனங்கள் மற்றும் பொருட்களை தயாரித்தல் மற்றும் வைத்திருப்பதை உள்ளடக்கிய பயங்கரவாத சட்டம் 2006இன் பிரிவு 9இன் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபர், எதிர்வரும் ஏப்ரல் வரை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பெருநகர பொலிஸ்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளையின் தலைவரான கமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித், ‘தற்போது எங்களுக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில் இந்த சம்பவம் இன்னும் பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்’ என கூறினார்.
செஷயரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவடைந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எல்லைப் படை அதிகாரிகள் டிசம்பர் 29ஆம் திகதி வழக்கமான ஸ்கேனிங்கின் போது, ஸ்கிராப் மெட்டல் ஏற்றுமதியுடன் கதிரியக்கப் பொருளைக் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.