மொத்தவிலை பணவீக்கம், நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், இண்டஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா உள்பட சுமார் 200 நிறுவனங்கள் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்த வாரம் வெளியிட உள்ளன. கடந்த டிசம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.
சீனாவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்ததால் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அதன் விலை 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. எனவே இந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை முதலீட்டாளர்கள் அதிகம் கவனிப்பார்கள். சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன.
இதுதவிர, இந்திய பங்குகள் தொடர்பான அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.