போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது. போகி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. அதாவது ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதிகளில் வரக் கூடியதாக இருக்கும். இந்தாண்டு 2023 ஜனவரி 14 (மார்கழி 30) சனிக்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகிப் பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் தான். அதாவது பழையனவற்றை வெளியேற்றி விட்டெறியக் கூடிய நாளாக கருதப்படுகின்றது. ஆனால் அந்த கால வழக்கப்படி கடந்த ஆண்டிற்கு நன்றியை தெரிவிக்கும் விதமாகவும், புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
வீட்டில் உள்ள பழைய தேவைற்ற பொருட்களை புறக்கணித்து, வீட்டில் புதியனவற்றைப் புகுத்த வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே போகி கொண்டாடப்படுகின்றது. இதனால் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களும், குப்பைகளும் அகற்றப்பட்டு வீடு நன்றாக சுத்தமாகும்.
அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் மனக்கசப்புகள் நீங்கி, வேண்டாத தீய எண்ணங்களை நீக்கி, உறவுகளை மேம்படுத்துவதற்கான பண்டிகை எனவும் சொல்லப்படுகிறது. அக்னியில் பழைய தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனைகளையும் போட்டு எரிக்கக்கூடிய நல்ல நாள்.
வழிபடும் முறை:
போகி தினத்தில் அதிகாலையில் ‘நிலைப் பொங்கல்’ நிகழ்வு நடத்த வேண்டும். அதாவது வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகு படுத்தி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்க வேண்டும். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும்எதிர்மறை சக்திகள் விலகும்.
அத்துடன் வடை, பாயசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்து மகிழ்வர்.