வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்…வானிலை ஆய்வாளர்கள் சொல்லும் புதிய காரணம் ..

by Editor News

டெல்லி, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் ஜனவரி 11 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விமானங்களும், தினசரி 500க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில அடி தூரத்தில் நடந்து வரும் வாகனங்களும் தெரியாத நிலையில் சாலை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 60 வயதைக் கடந்த கைதிகளுக்கு, சுடு தண்ணீர் வழங்கச் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குக் காரணம் புயலோ, மழையோ கிடையாது. வட இந்தியாவை வாட்டி எடுக்கும் பனியும், குளிரே ஆகும்.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக வானிலை மையம் ரெட், ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கையையும், விடுத்துவருகிறது. கடந்த 2021-2022 ஆண்டுகளில் பனி மூட்டம் காரணமாக 4240 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், இந்தாண்டு குளிரின் தீவிரம் கடுமையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இயல்பாக வட இந்தியாவில், நவம்பர், டிசம்பர் & ஜனவரி மாதங்களில் குளிரின் தாக்கம் சற்று மிகுதியாக இருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தற்போது போலக் கடுமையாக இருந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம் குளிர் அலை என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். குளிர் அலை என்பது மனித உடலின் சராசரி வெப்ப நிலையைக் குறைத்து, உடல் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

சமவெளி பிரதேசத்தில் வெப்ப நிலை 10 முதல் 4 டிகிரி செல்சியசுக்கு கீழ் குறையும் நிலையே குளிர் அலை எனப்படுகிறது. அதே போல் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழ் குறைவது கடுமையான குளிர் அலை எனப்படுகிறது. வட இந்தியாவில் தற்போது ஏற்படும் குளிருக்குக் காரணம் பனி மூட்டமே என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். அதாவது வட இந்திய நகரங்களில் மேற்பரப்பில் நிலவும் அடர்ந்த பனி மூட்டம், சூரிய கதிர்கள் பூமியைச் சென்றடைவதைத் தடுக்கிறது.

மேலும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று மிகப் பலவீனமாக இருப்பதால், இந்த பனி வட மேற்கு இந்தியப் பகுதிகளின் மீது நாள் கணக்கில் நீடிக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் பூமியைச் சென்றடைவதில்லை. மேலும் நிலப்பகுதியில் கதிர்வீச்சு விளைவுகளும் ஏற்படுவதில்லை. சூரிய ஒளியும்/வெப்பமும் பூமியைச் சென்றடையாததால் பகலில் தரைப்பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இதே நிலை இரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பதால் இரவு நேரங்களில் குளிர் கடுமையாக அதிகரிப்பதாகக் கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.கங்கை சமவெளிப் பகுதிகளில் இதே போன்ற கால நிலை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதே வட மேற்கு இந்தியப் பகுதிகளின் சராசரி வெப்ப நிலை குறைவதற்கும், அங்கு நிலவும் கடும் குளிருக்கும் காரணம். இந்த தசாப்தத்தில் இது போன்ற குளிர் அலை அதிகபட்சமாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்து இருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு தொடர்ந்து 7 நாட்கள் இதே போன்ற சீதோஷண நிலை நிலவியதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வரும் நாட்களில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று உத்தர பிரதேஷ், பீகார் போன்ற மாநிலங்களில் குளிரின் தீவிரத்தை மெல்லக் குறைத்தாலும், பஞ்சாப் டெல்லி போன்ற மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்குக் குளிர் சற்று மிகுதியாக இருக்கும் என்றே வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment