மார்கழி மாதம்: திருப்பாவை-30 திருப்பள்ளியெழுச்சி பாடல் – 10

by Editor News

ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதில் இன்று திருப்பாவை 30-வது பாடலையும் திருப்பள்ளியெழுச்சியில் 10-வது பாடலையும் பாடுவது சிறந்தது.

திருப்பாவை -30

கண்ணன் அருளால் இனி எல்லாம் சுகமே!

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கு அப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்

செங்கண் – திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

விளக்கவுரை:

அலைகடல் கடைந்த மாதவன்; திருமுடி அழகனான கேசவனிடம், நிறைமதி முகம்; செவ்வொளி வீசும் அணிகலன்களை உடைய இடைப் பெண்கள், கண்ணனிடம் சென்று, போற்றி வாழ்த்தி அவனுக்கு தொண்டாற்றும் பறை என்ற பேற்றைப் பெற்ற இவ்வழிமுறைகளை, அழகிய புதுவை என்ற ஸ்ரீவில்லிபுத்தூரில், குளிர்ந்த பசும் தாமரை மாலையை உடைய பட்டர்பிரான் பெரியாழ்வார் மகளான கோதை என்ற ஆண்டாள் தன் தோழியருடன் சங்கம் அமைத்து, சங்கம் வளர்த்த தமிழில் பாடிய பாமாலையான திருப்பாவை முப்பதையும் தவறாமல் இந்நிலவுலகில் உரைப்பவர்களுக்கு, மலை போன்ற நான்கு தோள்களும், சிவந்த கண்களும், அழகிய திருமுகமுடைய செல்வம் மிக்க திருமால் திருவருள் பெற்று எங்கும் எப்பொழுதும் இன்புற்று பேரின்பப் பெருவாழ்வு வாழ்வர்.

திருப்பள்ளியெழுச்சி – 10

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

Related Posts

Leave a Comment