நவம்பர் முதல் ஜனவரி வரை சாதாரணமாகவே வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவும். பக்கத்தில் வரும் நபரே கண்ணனுக்கு தெரியாது என்பது போலத் தான் இருக்கும். அதோடு இந்த முறை வழக்கத்திற்கு அதிகமாக குளிர் நிலவிவரும் நிலையில் இந்த வார இறுதியில் உறைபனி அலை தாக்கம் ஏற்படும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடங்கும்போதே இந்தியாவின் வடக்கு பகுதியில் இருந்து வரும் குளிர் காற்றால், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த குளிரின் பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குழந்தைகள் நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினசரி வெப்பநிலை என்பது ஒற்றை இலக்க எண்ணாக இருந்து வரும் நிலையில் இது மேலும் குறைந்து முதல் -4 முதல் -2 டிகிரி வரை குறையும். மேலும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதமானது 21-ம் நூற்றாண்டிலேயே மிகவும் குளிரான மாதமாகவும் அமையலாம் என்று லைவ் வெதர் ஆஃப் இந்தியா என்ற ஆன்லைன் வானிலை தளத்தின் நிறுவனரான நவ்தீப் தஹியா தெரிவித்தார்.
“நாடு மற்றொரு தீவிர குளிர் அலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் ஜனவரி 14-19 தேதிகளில் குளிர் அலை உச்சமாக இருக்கும். இப்படியே போனால், அதிகபட்ச வெப்பநிலையும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இவருடைய செய்தியை இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஜனவரி 15-16 ஆகிய தேதிகளில் முதல் வட இந்திய மாநிலங்களில் குளிர் அலை மற்றும் அதிக பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.