ஆளுநரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்றே அழைக்கலாம் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து கடந்த 9ம் தேதி நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றிய போது திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருந்தார். தமிழ்நாட்டை தமிழகமென அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி கருத்து தெரிவித்ததை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு. எனினும், தற்போதைய ஆளுநர் அப்பதவியில் நீடிப்பதற்கான தார்மீகத் தகுதியை இழந்திருப்பதால் பதவி விலக வலியுறுத்துகிறோம். சட்டப்பேரவை மரபுகளை மீறியிருப்பதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவமதித்துள்ளார். அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தனது நடவடிக்கைகளின் மூலம் உணர்த்துகிறார். எனவே, அவரைப்பதவி விலக வலியுறுத்தி இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த அறப்போராட்டம் வெற்றிகரமாக அமைந்திட வேண்டும். தமிழகம் தழுவிய அளவில் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அழைக்கிறேன். களத்தில் சந்திப்போம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.