தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த 30 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அடுத்த ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன்.
இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள இவர், தூத்துக்குடியில் கப்பல் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வந்த இவர், ரூ. 3 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
தனது தந்தை வங்கியில் செலுத்த கொடுத்த ரூ.50ஆயிரம் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்ததால் நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம் நிறைவேற்ற பிறகும் ஆளுநர் ஒப்புதல் தாராத நிலையில் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.