உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர் பாரி ஆகிய இரு தன்னார்வப் பணியாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 17:15க்கு காணாமல் போனவர் குறித்த புகாரைப் பெற்றதாக பக்முட் நகர பொலிஸ்துறை கூறியது.
இறுதியாக வெள்ளிக்கிழமை சோலேடார் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோதே அவர்கள் காணாமல் போயிருக்க கூடுமெனவும் அவர்கள் குறித்த தகவல் தெரியுமாயின் தம்மிடம் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீப நாட்களில் ரஷ்யாவின் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் கிராமடோர்ஸ்கில் இவர்கள் இருவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான போர் அதன் 11ஆவது மாதமாக தொடர்வதால், தற்போது நடைபெற்று வரும் பல்வேறு நகரங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக உக்ரைனுக்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராக பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், உயிருக்கு உண்மையான ஆபத்து இருப்பதாகவும் அது கூறுகிறது.
கடந்த ஆண்டு உக்ரைனில் பிரித்தானியர்கள் காணாமல் போவது அல்லது சிறைபிக்கப்படுவது போன்ற பல வழக்குகள் உள்ளன.
கடந்த செப்டம்பரில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் 10 கைதிகளை பரிமாறிக் கொண்டதாக சவுதி அரேபியா கூறியதை அடுத்து, ரஷ்ய ஆதரவுப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பிரித்தானிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டனர்.