சனி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்க இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.
பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
செவ்வாய்கிழமையன்று வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் அனுஷ்டித்து வந்தால் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
சதுர்த்தி திதி ஜனவரி 10ம் தேதியான இன்று மதியம் 12:09 மணிக்குத் தொடங்கி 2023 ஜனவரி 11 புதன்கிழமை மதியம் 02:31 மணிக்கு முடிவடையும், இந்த ஆண்டின் முதல் சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க் கிழமையில் வருவது மிகவும் தனித்துவமானது சிறப்புமிக்கது. இன்று விரதம் இருந்தால் நல்லது. அதிலும் இன்று சந்திரனையும், விநாயகரையும் வழிபடுவது மிகவும் மங்களகரமானது என்பது ஐதீகம். முக்கியமாக மதியம் 12:29 முதல் மதியம் 01:47 வரை உள்ள இந்த நேரத்தில் பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம்.
சந்திர தரிசனம் காணப்படாவிட்டால் சங்கடஹர சதுர்த்தி விரதம் முழுமையடையாது. இம்முறை சந்திரன் இரவு 08.41 மணிக்கு உதயமாகும், சந்திரனை தரிசனம் செய்த பிறகே விரதத்தை முடிக்க வேண்டும்.
செவ்வாய்க் கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்திகளில் விநாயகப் பெருமானை நினைத்து விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு, அதாவது ஆண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டதற்கு சமம்மாகுமாம்.
ஒரு வருடத்தில் சுமார் 13 சங்கடஹர சதுர்த்தி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஒவ்வொரு சதுர்த்திக்கும் உருவாகும் யோகமும் பலன்களும் வேறுபட்டது. ஆனால் செவ்வாய்க்கிழமையில் வரும் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை செய்வதால் 21 முறை விரதம் இருந்த பலன் கிடைக்கும். மேலும் அங்காரக என்றால் மங்களகரமானது என்று அர்த்தம். இந்த விரதத்தை செய்வதன் மூலம் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது, ஏற்கனவே உள்ள பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
விரதம் இருக்கும் முறை:
அங்காரக சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று சிவப்பு துணியில் விநாயகர் சிலை அல்லது புகைப்படத்தை வைத்து வணங்க வேண்டும். பின்னர் விநாயகருக்கு மலர்களை வைத்து பூஜிக்க வேண்டும். முதலில் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.
பிரசாதம் கொடுக்க வேண்டும். பிரசாதத்திற்கு லட்டு அல்லது மோதகம் மிகவும் நல்லது. இவை இரண்டு விநாயகருக்குப் பிடிக்கும். மேலும் கடவுளுக்கு நெய் தீபம் ஏற்றி, கணேஷ் ஸ்துதி சொல்லி, ஆரத்தி செய்யவும். மேலும், இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து இரவில் சந்திர தரிசனம் செய்து உணவு உண்ண வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.