ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.
திருப்பாவை பாடல் – 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
பொருள்:
பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் : 06
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:
பார்வதி தேவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல் கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.